மார்க்சின் வார்த்தைகளை பிழைப்புவாத கண்ணோட்டத்தில்

 தத்துவஞானிகள் உலகை வியாக்கியானம் செய்தார்கள். பிரச்சினை என்னவென்றால் அதை மாற்றியமைப்பதுதான்.

-கார்ல் மார்க்ஸ்.
மார்க்சியத்தை அதன் அடிப்படைச் சாராம்சத்தை மதரீதியிலான பாணியில் திறந்து போடுவது. அதற்கேற்ப மார்க்சியத்தின் அடிப்படைக் கருத்தியல்களை திரித்து முன்வைத்து மார்க்சியத்தை மதமாக சித்தரிப்பது. அதன் பின் மார்க்சியம் மதமாக இறுக்க வடிவில் உள்ளது, அதை திறந்த வாசிப்புக்கு உட்படுத்த வேண்டுமென்று வியாக்கியானம் செய்வது.
மார்க்சின் வார்த்தைகளை பிழைப்புவாத கல்வித்துறை மேஜையில் வைத்து ஆபத்தல்லாத கருத்துகள் என்று அறுவைச் சிகிச்சை செய்வது. மார்க்சின் இதயத்தை மனிதவியலாகவும் மூளையை பொருளாதார நிர்ணயவாதமாகவும் மாற்றுவது. இளம் மார்க்ஸ் முதிய மார்க்ஸ் என்று பேதம் பிரித்து தங்களை முழுமார்க்சாகக் கருதிக்கொண்டு மார்க்ஸ் சமூகத்தை குறித்து சொன்னதையெல்லாம் நிராகரித்து தங்களை அவ்விடத்தில் பொருத்திக் கொள்வது. (கோமாளியாகக் காட்சியாளிப்பது அதுவும் அறிவுத்துறை கோமாளியாகக் காட்சியளிப்பது அவப்புகழ் பெற்றாவது அறிவுஜீவி என்ற அடையாளத்தைப் பெறுவது) மார்க்சியத்தின் செயலூக்கமான தத்துவத்தை வெறுமனே வாசிக்கவும் எழுதவுமான வார்த்தையாடல்களாக வைத்து தங்களது பிழைப்பை ஓட்டுவது.
பேச்சையும் எழுத்தையும் விற்பதையே தொழிலாகக் கொண்ட சில பேராசிரியர்களின் பித்துப்பிடித்த சொல்லாடல்கள் தாண்டி இந்நுல்களில் வேறெதையும் காணமுடியவில்லை. ஃபிராங்க்பர்ட் மார்க்சியம் என்ற பெயரில் முதலாளித்துவ வர்க்கத்தின் செல்லக் குழந்தைகள் தங்களது உளறல்களை மார்க்சியத்தின் மீதேற்றி வெறுமனே கதையாடிய கதைகள்தான் திறந்த மார்க்சியம்.
சுருங்கச் சொன்னால் திறந்த மார்க்சியம் என்பது வேறொன்றுமில்லை. மார்க்சியத்தை மார்க்ஸாலஜியாக கல்வித்துறை மார்க்சியமாக வெறுமனே விவாதிக்க மட்டும் பயன்படும் ஏட்டுச்சுரைக்காயாக மாற்றுவது. அதனை அடிப்படையாக வைத்து மார்க்சியம் ஆபத்தில்லாத தத்துவம். முதலாளித்துவத்தின் சுரண்டல்களுக்கு எந்த ஆபத்தையும் வரவழைக்காத - போராடாத வெறுமனே விவாதிக்கும் வெறும் கருத்தியல் மட்டுமே மார்க்சியம் என்று சித்தரிப்பது. முதலாளிகளே மார்க்ஸ்க்கு யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று நிறுவதுதான் திறந்த மார்க்சியம். முதலாளித்துவத் தத்துவ அடியாட்களின் செயல்திட்டம் இதுவன்றி வேறில்லை.
அறிவுத்துறைப் போலிகள் என்றே இக்கட்டுரைகளை எழுதியவர்களைக் கூறுவேன். இவர்களது அறிவுக்கு எந்த செயலூக்கமான சமூகநோக்கமும் இல்லை. இருப்பதெல்லாம் அறிவுசார் பிழைப்புவாதம்தான். வெறுமனே விவாதித்தால் போதும் என்பதைத் தாண்டி இந்நூலில் திறந்து கொண்டோ மூடிக்கொண்டே கற்பதற்கு மார்க்சிய மாணவர்களுக்கு எதுவும் இல்லை. திறந்தநிலை ஜனநாயகம்- திறந்தநிலை முதலாளித்துவம்-திறந்த நிலை மனிதத்துவம் போன்ற சொற்கள் எவருடைய தேவைகளை திறந்து போட்டு வரவேற்கிறது என்பது நாமறியாததல்ல. முதலாளித்துவத்தின் திறப்புகள் எவரின் சேவைக்கு? அச்சேவைகளை கடமைகள் என வரையறுக்கும் பண்பையும் திறந்து போட்ட இவர்களது சொந்த மார்க்சியத்தில் காணலாம்.
முத்துமோகன் போன்ற தான்திருடிப் பேராசிரியர்கள் மார்க்சியத்தைச் சிதைத்து முதலாளித்துவக் கருத்தியல்களுக்கும் அடையாள அரசியலுக்கும் அறிந்தே சேவை செய்து தன்னை ஒப்புக்கொடுத்து விளக்கமளிக்கும் போது எரிச்சல் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. இதைவிடக் கொடுமை என்னவென்றால் “அடையாள அரசியலிலும், பண்பாட்டு அரசியலிலும் தீவிரமாகப் பயணித்து வரும் மார்க்சியக் கோட்பாட்டாளர் பேராசிரியர் முத்துமோகன்” என்று எந்தக் கூச்சமும் இல்லாமல் பின்னட்டைகள் உற்பத்தியாகின்றன. மார்க்சியக் கோட்பாட்டாளர் என்பவர் மார்க்சியத்தை ஏற்று அடையாள அரசியலையும் பண்பாட்டு அரசியலையும் விளக்க வேண்டுமே தவிர பயணிக்கக் கூடாது. போதாக்குறைக்கு தன்னை மார்க்சிய அறிஞர் என சுரணையில்லாமல் அறிவித்துக் கொள்வது அருவருப்பு தரும் காரியமின்றி வேறென்ன.
ஏலவே இதே பணியைச் செய்த ராஜதுரையை ‘முக்கிய மார்க்சிய அறிஞர்!’ என முக்க வைத்திருந்தது தமுஎகச. அதன் நீட்சிப் போக்குகளில் ஒன்றுதான் பிற எழுத்தாளர்களது விமர்சனப் பார்வைகளை திருடி தமுஎகச அறிக்கையாக துணிந்து வைத்து புத்தகமாகப் போட்டு கையும் களவுமாக மாட்டி பதில் சொல்ல முடியாமல் இன்னமும் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறது தமுஎகச.
திறந்தநிலை மார்க்சிய நூலின் ஆசிரியர்கள் குறித்து “மரபு ரீதியான மார்க்சியத்தில் கேள்விக்கு அப்பாற்பட்ட வரையறைகளாக கருதப்பட்டவற்றை விமர்சனப் பார்வையுடன் மீளாய்விற்கு திறப்பதைத்தான் திறந்தநிலை மார்க்சியத்தின் நோக்கமாகக் கொண்டுள்ளனர்" என்கிறார் முத்து மோகன்.
இதன் அடிப்படையில் அய்யா முத்துமோகன் ஆடியிருக்கும் பின்நவீனக் குத்தாட்ட வாசிப்பை கீழ்க்காணலாம். “பிரெஞ்சு மார்க்சியரான லூயி அல்தூசர், மார்க்சியம் ஒரு “நெருக்கடி”யினுள் சிக்கிக் கொண்டிருக்கிறது என்ற ஓர் எச்சரிக்கையை 1978-ல் அறிவித்தார். அடுத்து வந்த ஆண்டுகளில் அந்த எச்சரிக்கை கூடுதலான விளைவுகளைச் சந்தித்தது.” என்றெழுதுகிறார் முத்துமோகன்.
சம்பந்தப்பட்ட திறந்திலை மார்க்சியம் முதல் தொகுதி அறிமுகத்தில்: “மார்க்சியம் நெருக்கடியில் உள்ளது என அல்தூசர் 1978-ம் ஆண்டு அறிவித்தார். 1980 ஆண்டுகளில் இந்த நெருக்கடி முற்றியதாகவே தெரிகின்றது... உண்மையில் ‘நெருக்கடி’யில் இருப்பதாக அல்தூசரால் அறிவிக்கப்பட்ட மார்க்சியம் குறிப்பாக கட்டமைப்புவாத மார்க்சியத்தின் (structuralist Marxism) அவரது தொடக்ககால பிரதிகள் தீர்க்கதரிசனம் வழங்கிய ஒரு தளுக்கான நிர்ணயவாதம்தான். முரண் நகையாக 1980-களில்’ ஒழுங்காற்றல் அணுகுமுறை” என அறியப்பட்டதால் போதிக்கப்பட்டதாக கட்டமைப்புவாத மார்க்சியத்தின் கிளைகள் செழித்து வளர்ந்தன” என்கிறார்கள் நூலுக்கு அறிமுக உரை எழுதியவர்களானவெர்னர் போன்ஃபெஸ்ட், ரிச்சர்ட்குகன், சைக்கோபீடிஸ். ஆக அந்த நெருக்கடி மார்க்சிய நெருக்கடியாக முத்துமோகனது வாசிப்பில் உருப்பெருகிறது.
“மார்க்சியத்தை அதன் வறட்டுவாத மூடுண்ட வடிவங்களில் இருந்து விடுவித்து அதன் விடுவிக்கும் உயிர்சக்தியை மீட்டெடுத்து அதை புரட்சிக்கான ஆயுதமாக கூர்த்தீட்டுவது இன்றைய புரட்சியாளர்களின் கடமையாக உள்ளது" என்கிறார் தான்திருடி முத்து மோகன். இதனடிப்படையில் இந்தப் புரட்சியாளர்கள் திறந்த மார்க்சியத்துக்குக் கொடுக்கும் விளக்கங்களைக் கொஞ்சம் பார்க்கலாம்.
“மரபு ரீதியான மார்க்சியத்தில் கேள்விக்கு அப்பாற்பட்ட வரையறைகளாக கருதப்பட்டவற்றை விமர்சனப் பார்வையுடன் மீளாய்விற்குத் திறப்பதைத்தான் திறந்தநிலை மார்க்சியத்தின் நோக்கமாகக் கொண்டுள்ளனர்” என்பதோடு “திறந்த நிலை மார்க்சியம் என்பது சமீப காலங்களில் பேசப்பட்டுவந்த “பின்னை மார்க்சியம்“ என்பதற்கு மாற்றாகவும் முன்வைக்கப்பட்டது” என்கிறார் முத்துமோகன்.
திறந்தநிலை மார்க்சியம் என்ற வறட்டுவாதக் குழப்பத்தில் கட்டுரை எழுதிய ஆசிரியர்களின் முரண்கள் நமக்கு பல்வேறு நிலைகளை அப்பட்டமாகத் திறந்து காட்டும்பொழுது நாம் மூக்கைப் பொத்திக் கொள்ளும் நிலைக்கு ஆளாவதை தவிர்க்கமுடியாது.
“மானுட விடுதலைக்கான தத்துவமாக 19 ஆம் நூற்றாண்டில் உருவான மார்க்சியத்தின் இன்றைய நிலை என்ன?” எனக் கேள்வி எழுப்பும் முகமாக பலவற்றை உள்ளிழுத்துப் போடும் முத்துமோகன் “மார்க்ஸிஸ்டுகள் தரப்பிலும் மார்க்சியத்தின் எதிரிகளிடமிருந்தும் இதற்கான எதிர்வினைகள் நாட்டுக்கு நாடு வேறுபட்டன. அரசியல் களத்திலும் கோட்பாட்டு விவாதங்களிலும் போராட்டங்கள் நடந்தன. தத்துவத் துறையில் பின்நவீனத்துவம் என்ற போக்கைக் குறிப்பாக சொல்லலாம்” எனும் முத்துமோகன் பின்நவீனத்துவத்துக்கு தத்துவார்த்த முகத்தை வழங்குகிறார்.
இங்கு பின்நவினத்துவம் மார்க்சியத்திற்கு எதிரானது எனக் கூற்றை வைக்கும் முத்துமோகன் “விளிம்பு நிலை சமூகங்கள் பற்றி மார்க்ஸ்- தேசியம் இனவியல் மேற்குலகுசாராச் சமூகங்கள்” என்ற நூலின் முன்னுரையில் “நமது காலத்தில் உருவாகியுள்ள பின்னை நவீனத்துவம், பின்னைக் காலனியம், பெண்ணியம், தலித்தியம் போன்ற சிந்தனைப் போக்குகள் மார்க்சியத்தின் உள்ளுறை ஆற்றல்களை மேலும் பளிச்செனத் தெளிவாக்குகின்றனவே அன்றி அவற்றை மங்கச்செய்வன அல்ல’ என கும்மியை தலைகீழாக அடித்துப் பாடுகிறார்.?
அங்கு எழுதும்போது பின்நவீனத்துவம் ஒரு தத்துவத் துறை என எழுதியவர் இங்கு சிந்தனைப் போக்கு என்கிறார். மேற்பட்ட இசங்கள் மார்க்சியத்தை எந்த இடத்தில் தெளிவாக்கி அதை பேராசியர் முத்துமோகன் படித்தார் என்பது அவருக்கே வெளிச்சம். மார்க்சியத்தைத் தெளிவாக்கும் அளவுக்கு சம்பந்தப்பட்ட இசங்களில் இருக்கும் தத்துவார்த்த மரபு எது? அயோத்திதாசருக்கும் அம்பேத்கருக்கும் வித்தியாசம் தெரியாமல் பிழைப்பை ஓட்டியதோடு தோழர் ஏ.பி.பரதனையும் முன்னுரை எழுதச் சொல்லி ஏமாற்றியவரும் இந்த முத்துமோகன்தான்.
இப்பொழுது பதிப்பாசிரியர் என்ற கோதாவில் மேற்கண்ட நூல்களில் அதையே செய்து வருகிறார். கேட்டால் நான் மார்க்சிய அறிஞராக்கும்!!! என்பார்.
பின்நவீனத்தை தத்துவ அடிப்படையில் வைக்கும் மார்க்சிய அறிஞரான! முத்துமோகனை என்னவென்று சொல்வது. போதாக்குறைக்கு ஏகப்பட்ட இயங்களையும் மார்க்சியத்தோடு இணைத்து மார்க்சியத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிதைக்கிறார். ஒவ்வொரு தேசத்துக்கும் ஒவ்வொரு மார்க்சியம் இருக்க முடியும் என நம்பும் அவர் ஒவ்வொரு தேசத்துக்கும் பெண்ணியம் பின்நவீனத்துவம் பின்னைக்காலனியம் எப்படி மாறுபடுகிறது என விளக்குவாரா?
“இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்கள் முதலாளித்துவ அறிவுத்துறையில் ஆழமான நெருக்கடிகளை ஏற்படுத்தின. அறிவியல் புரட்சி யுகத்தில் நிலவுவது என்ன முதலாளித்துவம்? இந்தக் கேள்விக்கு பின்முதலாளித்துவம்(late capitalism) என்று ஒரு பதில் அளிக்கப்பட்டது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் பன்னாட்டுப்பகாசுரக் கம்பெனிகள் உருவாக்கிய நுகர்வுச் சந்தையின் அலகாக மனிதன் மாறிப்போனான். உலகமயமாக்கலின் கீழ் தேசங்களும், மதங்களுக்கும்,மனிதர்களும் முகமும்-ஆன்மாவும் இழந்து சந்தைக் குப்பைகளாயினர். இதெல்லாம் என்ன?இவைகளை எப்படி விளங்கிக் கொள்வது? தனிமனிதனின் மேன்மையை முதலாளித்துவ வழியில் மீண்டும் எவ்விதம் நிலைநாட்டுவது? முதலாளித்துவ அறிவுத் துறையில் ஏற்பட்ட இந்த நெருக்கடி பின்நவீனத்துவத்தைப் பிறப்பித்தது. ‘பின்நவீனத்துவம் ஒரு தத்துவமே அல்ல. அது எல்லாத் தத்துவங்களையும் நிராகரிக்கிறது. பின்நவீனத்துவ, வன்முறைக்கும், அதிகாரத்துக்கும் எதிரான அணுகுமுறை” எனத் தன்னை பிரமாதமாக அறிமுகப்படுத்திக் கொள்கிறது. ஆனால், தத்துவ அடிப்படை அல்லாத அணுகுமுறை எங்கே இருக்கிறது?
எல்லா மொழித் தத்துவத்தையும் நிராகரித்தல் என்ற பெயரில் மதம், அரசியல், பொருளாதாரம், பகுத்தறிவு, மார்க்ஸியம் உள்ளிட்ட தத்துவங்களையும், அறிவியலையும் பெருங்கதையாடல் என நிராகரித்துவிடுகிறது. பின்நவீனத்துவத்துக்கு வர்க்கம், அரசு, குடும்பம், மரபு,ஒழுக்கம் போன்றவை மொத்தப்படுத்தலின் அடையாளங்கள் இவற்றை நிராகரிக்க வேண்டும். எல்லா அதிகாரங்களையும் மறுத்து - பொதுக்கருத்து என்ற ஒன்றை நிராகரிக்கும் பின்நவீனத்துவம் அநீதிக்கு எதிரான கலகத்தின் தத்துவம் கூட அல்ல.... பின்நவீனத்துவம் ஒரு தத்துவம் இல்லை உண்மைதான். ஆனால் அது முன்வைக்கும் கோட்பாடுகளுக்கு தத்துவ அடிப்படை உண்டு.
அந்தத் தத்துவ அடிப்படை மார்க்ஸியத்தைக் குறிவைத்துத் தாக்குகிறது. மார்க்ஸியம் தட்டையானது, ஒற்றைத்தன்மையுடையது, தனித்தன்மைகளை நிராகரிப்பது என உளறிக் கொட்டுகிறது. வரலாற்றைக் கதையாடலாக-மனிதனை மொழியின் விளைவாகக் காட்டும் கேலிக்கூத்தைப் பின் நவீனத்துவம் செய்கிறது. மார்க்ஸிய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் அடிப்படைகளைக் கதையாடல் என்ற ஆயுதம் மூலம் அடித்து நொறுக்கி விடுவதாக கூச்சல் எழுப்புகிறது.” என்கிறார் தேவ.பேரின்பன்.
குறைந்தபட்சம் மார்க்சியத்தை தேர்தல் அரசியல் முறையில் கொண்டுசெல்வது அதன் எதிர்காலத்துக்குப் பயனுள்ளதா? பாராளுமன்ற ஜனநாயகப் பண்பு மார்க்சியத்தை எப்படி களத்தில் சந்திக்கிறது? சந்தர்ப்பவாத அரசியல் கூட்டணிகளுக்கு உலகுதழுவிய தத்துவார்த்த முகத்தைக் கொடுக்கலாமா? ஜனநாயகத்தின் எல்லையை எப்படி வரையறுப்பது? என்கிற அடிப்படைகள் கூட இல்லாத வெற்றுப் புலம்பகளும் வியாக்கியானம் நிரம்பிய கட்டுரைகள் கொண்ட நூல்கள் இவையென்றால் சந்தேகமில்லை.
போலித்தனமான அக்கறைகளுக்கு தத்துவார்த்த முகம் வழங்கி மார்க்சியத்தில் எதுவெல்லாம் இல்லை என்று தங்களது பேராசிரியப் பிழைப்பை முன்வைத்து வரிசைப்படுத்துவது. சொந்த விளக்கங்கள் கொடுப்பது. மார்க்சியம் என்கிற வார்த்தையை உருவிவிட்டு அங்கு மனிதத்துவம் மதம் கலை போன்ற சொற்களை இட்டு அதற்கு ஊகப் பொருளாதார அறிவுரைகளை வழங்கினால் நீங்களும் மார்க்சித்தை உங்கள் சொந்தவீட்டுக் கதவாக திறந்துபோடலாம்.
ஆளும் வர்க்கத்திற்கு மார்க்ஸ் என்றும் ஆபத்தானவர்தான். மார்க்சியம் எதிரிதான். தோழர்களே குறளிவித்தை காட்டி வார்த்தைகளை உருட்டு உருட்டென உருட்டி பிழைப்பு நடத்தும் இதுபோன்ற பேராசிரியர்களிடம் ஜாக்கிரதையாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள். மார்க்சியத்தின் பெயரால் இவர்கள் தோண்டும் பிழைப்புவாதக் குழியில் வீழ்ந்துவிடாதீர்கள்.
எடுத்துக்காட்டாக திறந்தநிலை மார்க்சியத்தை அதை எழுதியப் பேராசிரியர்கள் ஒரு சொல்லப் போனால்:
அறிவுமரபு என்பது சமுதாயங்களின் நெருக்கடி முற்றிய பாணியை விடுத்து வார்த்தைகளுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுப்பதும் அர்த்தத்தைச் சிதைப்பது அர்த்தங்கள் கொடுத்த உணர்வின் வெளிச்சத்தில் அதன் நிகழ்வில் செயலற்ற தன்மையில் முடுக்கிவிடப்பட்ட அர்த்தங்கள் நீக்கப்பட்ட புலப்பாட்டின் மெய்யியலை நோக்கியும் அனுபவத்திற்கும் அனுபவத்தை கூறிட்டு உள்ளிருக்கும் அடித்தளத்தை குறுக்குவெட்டுத் தோற்றத்தின் கீழ் பார்க்கும்போது தன்னிலையும் எழுவாயுக்கும் இடையே இருக்கும் சமூகத்தின் விலக்கம் வெளிப்படுவதோடு அகவயத்தன்மைக்கும் புறவயத்தன்மைக்கும் இடையே கணிதத்தன்மை புலன்களின் ஊடாகப் பாய்வதும் அனுபவத்தின் வெளி அனுபவவாதத்தை சமுகமற்ற சமூகத்தின் தனிமனித அனுபவமாக எதையும் சார்ந்திராத சமகால தத்துவமரபின் கோட்பாட்டு மரபை உள்ளிருந்தே அதன் மெய்யான அனுபவத்தில் அடிப்படைப் பிரச்சினைகளை வைத்து லெனின் மற்றும் ரோசாலக்சம்பர்க்கின் வெளிச்சத்தில் இவற்றைப் பிரயோகிக்காமல் தன்னனுபவத்திற்கும் நிலையனுபவத்திற்கும் வெளியே மார்க்சின் சொற்கள் பாட்டாளி வர்க்கத்தினுடையவையா இல்லையா என்பதை ஆராய்ந்து வெர்னர் போன்ஃபெல்ட்டினுடைய ஆய்வுகளை ரிச்சர்ட் குகன் மெய்யான வடிவத்தில் விளக்கம் செய்யாமல் அதன் நிழல்படிந்த இருட்டுக்குள் சென்று அடியாழத்திலிருந்து மெய்மையின் பிரச்சினைப்பாடுகளை விளக்க ஜான் ஹாலவே அதைப் போலச் செய்து காஸ்மாஸ் சைக்கோபீடீஸின் சமூக வரையறையகளை புலப்பாட்டு மட்டத்தில் வைத்து விசாரணையை மேலெழும்பச் செய்ய அல்ப்ஃபோன்சா கார்சியா வேலாவின் தத்துவமட்டத்தின் வாதமுடிச்சுகளை முத்துமோகன் கண்டுபிடித்த ஆராய்ச்சிப் படிவங்களின் வழியாக அம்பேத்கரது ஆழ்ந்த கீழைத்தேய புதுக்காலனிய மரப்போடு விளக்கம் பெறலாம். கட்சிக்கும் அனுபவத்துக்கும் கட்சி உறுப்பினருக்கும் உறுப்பினர் சார்ந்த தத்துவத்தளத்திற்கும் அத்தளத்தில் நிற்கும் அடிப்படையற்ற புரிதலோடு இயங்கும் பேராசியர்களின் தர்க்கவாத சித்திரங்களுக்கிடையில் புலப்பாட்டு மையமானது நிலைபெறும்போது காலத்தின் தேவைகளைக் கணக்கில் கொண்டு முதலாளித்துவம் பணத்தை அச்சிட்டு வரிகளாகவும் அது தரும் வசதிகளின் மைய்யப்பாட்டில் பல்கலைக்கழகங்கள் நிதிநல்கை வழங்கி அதன் மூலம் சிந்தித்து பொதுவில் வைக்கபட்ட எதையும் திறந்து பாரக்கவேண்டும். மூடுண்ட அமைப்பும் பல்கலைக்கழகங்களும் இதன் விதிவிலக்கான நிரூபணத்தை வாசகர்களிடம் திறந்தநிலையில் வாசித்து பொருள்கூறுவதில் உள்ள பிரச்சினைகளை ஆராய வேண்டும். இதில் வாசகர்கள்தான் திறந்து போட்டதை மூடி வைத்து விவாதத்திற்கு வரவேண்டும். (அப்படியே இதில் எதாவது உங்களுக்குப் புரிந்தால் சொல்லவும் வேண்டும்)
- வ சு மி த் ர

Comments

Popular posts from this blog

பெண்கள் பற்றி பெண்கள்

இன்றைய விவாதம்

நானும் இயக்கத்தில்